வியாழன், 1 ஜனவரி, 2015

அர்ஷின் நிழல் யாருக்கு ?


அஸ்ஸலாமு அலைக்கும்
நிழலே இல்லாத நாளில் தன் அர்ஷின் நிழலில் 7 பிரிவினருக்கு நிழல் அளிப்பான்
அந்த 7 பிரிவினர் அல்லாத வேறு யாருக்கும் நிழல் அளிப்பான் என்று ஹதீஸ் இருக்குதா?



ஸஹீஹ் முஸ்லிம் 1869. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர். 6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது.



அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறியதாக‌, உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான். (முஸ்லிம் 5736)

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

அபூகதாதா(ரலி) விடம் ஒருவர் கடன்பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் அவர்கள் செல்லும்போது, அவர் ஒளிந்து கொள்வார். 

ஒருநாள் (அவ்வாறு) வந்தபோது ஒரு சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது "ஆம்; வீட்டில் 'ஹஸீரா' (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்" என்று சொன்னான். உடனே அபூகதாதா (ரலி) "இன்னாரே! வெளியே வந்துவிடும். நீர் அங்குதான் இருக்கிறீர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று சொன்னார்கள். அவர் வெளியே வந்ததும், "நீர் என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். "என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்" என்று சொன்னார். 

இதைக் கேட்ட அபூகதாதா(ரலி) அழுதார்கள். பிறகு "யார் கடன்பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது இப்னு கஃஅப் அல்குரளி
நூல்: அஹ்மத் (21574, 22023)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக