செவ்வாய், 13 ஜனவரி, 2015

புஹாரி நூலில் உள்ள ஜின் சம்பந்தப்பட்ட செய்திகள்

புஹாரி நூலில் உள்ள ஜின் சம்பந்தப்பட்ட செய்திகள்


461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

609,3296. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.

773. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் 'உக்காழ்' எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன' என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் 'திஹாமா' எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். 'உக்காழ்' சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, 'வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்' என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, 'எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணை வைக்கவே மட்டோம்' என்று கூறினர். உடனே அல்லாஹ் 'ஜின்' எனும் அத்தியாயத்தை இறக்கியருளினான். நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அத்தியாயத்தல் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல.)

1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

1338,1374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்."
அனஸ்(ரலி) அறிவித்தார்.

3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள்.

3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

3423. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, 'என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!" (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (461 ஹதீஸின் கருத்திற்கு இந்த ஹதீஸ் முரண் , காரணம் அந்த ஹதீஸில் இப்றித் என பெயர் உள்ளது இங்கு பலம் பொருந்திய என்று தான் உள்ளது ))

3859. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஜின்கள் குர்ஆனை செவிமடுத்த இரவில், நபியவர்களை (இன்னாரென்று) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவர் யார்?' என்று நான் மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஜின்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் தாம் என்று) அவர்களை அறிவித்துக் கொடுத்தது ஒரு மரம் தான் என உங்கள் தந்தை - அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.

3860. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்), அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)" என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே" என்று கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?' என்று வேண்டாம். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் 'நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்" என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்" என்று பதிலளித்தார்கள்.

3866. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) (ஒரு விஷயத்தைப் பற்றி) 'நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்" என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போன்றுதான் இருக்கும். ஒரு முறை உமர்(ரலி) (தம் இடத்தில்) அமர்ந்திருந்த பொழுது அழகான ஒருவர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர்(ரலி), 'ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்து தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தம் (பழைய) அஞ்ஞானக் காலத்து மார்க்கத்திலேயே இருக்கவேண்டும்; அல்லது (அஞ்ஞானக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர், உமர்(ரலி) அவர்களிடம் அழைத்து வரப்பட்டார். உமர்(ரலி), தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர், (தன்னைப் பற்றி உமர் முன் வைத்த சந்தேகத்தினால் வெறுப்படைந்தவராய்) 'இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை" என்று கூறினார். உமர்(ரலி), 'நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத் தான் வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'நான் அஞ்ஞானக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்" என்று கூறினார். உமர்(ரலி), 'உன்னுடைய பெண் ஜின் உன்னிடம் கொண்டு வந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?' என்று கேட்டார்கள். அம்மனிதர், 'நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெட்டை ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது 'ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துளள நிராசையையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை வாலிப ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?' என்று கேட்டது" என்று கூறினார். உமர்(ரலி), 'இவர் உண்மை கூறினார். நான் (கஅபாவில்) இணைவைப்பவர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டு வந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதை விடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவிமடுத்ததேயில்லை. அது, 'பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், '(அல்லாஹ்வே!) வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்வார்" என்று குரல் கொடுத்தது. உடனே (இணை வைக்கம்) மக்கள் குதித்தெழுந்தார்கள். நான், 'இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ளாமல் விட மாட்டேன்" என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி 'பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்வார்" என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்று விட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே 'இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)" என்று சொல்லப்பட்டது.

4008. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.
இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார்.
அபூ மஸ்வூத்(ரலி) இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக கேட்டேன். அப்போது (அல்கமா - ரஹ்- அவர்களிடம் கூறியது போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள்.

4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

4714. அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில் '17:56 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்...' என்று காணப்படுகிறது.

4715. அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாய்) அழைக்கின்றனரோ அவர்களே கூடத் தங்களின் (உண்மையான) இறைவனது நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமனித்தார்கள்: 'ஜின்' இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டுவந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்:
முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.
ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்' என்றும் இடம் பெற்றுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு உலைய்யா(ரஹ்) தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை. 11 (7:27 வசனத்திற்கு முரண் )

4921. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் 'உக்காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், 'வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன' என்று பதிலளித்தனர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்' என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
'திஹாமா' எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது 'உக்காழ்' சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நக்லா' எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு 'ஃபஜ்ரு'த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள் அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) 'வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்' என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, 'எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்' என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, '(நபியே!) நீர் கூறுக: வஹீ (இறைச்செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்...' என்று தொடங்கும் இந்த (72 வது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி 'வஹி'யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

5762. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். 'அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் சிலவேளைகளில் எங்களக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 87
அறிவிப்பாளர் அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) கூறினார்:
(இந்த ஹதீஸில்) 'அந்த உண்மையான சொல்' எனத் தொடங்கும் இறுதித் தொடரை அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் கின் ஹம்மாம்(ரஹ்) நபியவர்களின் சொல்லாக (முதலில்) கூறவில்லை. பிறகு, அது நபியவர்களின் சொல்லே என அவர் கூறினார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது.

6213. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல' என்று பதிலளித்தார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்.

7383. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.

7548. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் என்னிடம் 'நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன்' அல்லது 'உங்கள் பாலைவனத்தில் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடும்லும் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்' என்று சொல்லிவிட்டு, 'இதை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்' என்றார்கள்.

7561. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்' என்றார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவித்தார்கள்; அது உண்மையாகி விடுகிறதே!' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்' என்று பதிலளித்தார்கள்

Thanks to Abu backer siddique

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக