சனி, 10 ஜனவரி, 2015

பல்லியை கொல்ல வேண்டுமா ?



பல்லியை  கொல்ல  வேண்டுமா ?
3359 உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை- அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 3359

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள் என்று மட்டும் இருந்தால் நபிகள நாயகத்தின் அந்தக் கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும். இது எந்த வசனத்துக்கும் எதிரானது அல்ல.மேலும் பல்லி  தீங்கிழைக்க  கூடியது அதனால்  கொல்லுங்கள்  என்று  வரக்கூடிய  ஹதீஸ்களை நாம் மறுக்க வில்லை ஆனால்

ஏன் கொல்லச் சொன்னார்கள் என்றால் இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று சொல்லப்படுகிறது.அதனால் கொல்லுங்கள்  என்று  இந்த  செய்தி  சொல்கிறது

இதனை நாம் எப்படி பார்க்கின்றோம். இதை நபி அவர்கள் சொல்லவில்லை என்றே சொல்கின்றோம். குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்கள்.

பல்லி ஒரு சிறு உயிரினம். அது நெருப்பை ஊதி பெரிதாக்கியது என்பது மிகப்பெரும் மேதையான நபியின் கூற்றைப் போல் இல்லை.

அந்த நெருப்புக்கு அருகில் என்றால் கூட அது கருகி விடும் என்ற விஷயம் கூடவா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?

சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். சுலைமான் நபியவர்களுக்கு ஹுத் ஹுத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 27:20)

ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராக களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 81)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் (13 : 15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் (22 : 18)

இந்த அடிப்படைக்கு மாற்றமாக பல்லி சம்பவம் அமைந்துள்ளது.

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்பதை பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். 

அல்குர்ஆன் (6 : 164)

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் (17 : 15)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. 

அல்குர்ஆன் (35 : 18)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. 

அல்குர்ஆன் (39 : 7)

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் (53 : 36)

ஒரு பல்லி இப்ராஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அந்தப்பல்லியைத் தான் கொல்ல வேண்டும். அந்தப் பல்லி அல்லாத மற்ற பல்லிகளை எப்படி கொல்லலாம்?

அந்த பல்லியின் வாரிசுகளையும் அந்தப் பல்லி அல்லாத மற்ற பல்லிகளின் வாரிசுகளையும் கொல்லுமாறு குர்ஆனுக்கு எதிராக நபியவர்கள் சொல்லி இருப்பார்களா?

எனவே இது நபியவர்கள் சொல்லாததாகும். அவர்கள் பெயரால் யாரோ இட்டுக்கட்டியதாகும் என்று முடிவு செய்வதுதான் ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்

பல்லி சம்மந்தமாக புஹாரியில்  வரும் மற்ற ஹதீஸ்கள்

3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள். 
Volume :4 Book :60


3307. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள். 
Volume :3 Book :59

3306. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், 'பல்லி தீங்கிழைக்கக் கூடியது" என்றார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கருதிக் கொண்டிருக்கிறார்கள். 
Volume :3 Book :59


1831. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"பல்லி தீங்கிழைக்கக் கூடியது!" 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
ஆனால், 'அதைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!" என்றும் ஆயிஷா(ரலி) கூறினார். 
Volume :2 Book :28

முஸ்லீமில் வரும் ஹதீஸ்கள்

4505. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லிகளை (அடித்து)க் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 
Book :39


4506. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பல்லிகளைக் கொல்வதற்கு அனுமதி கேட்டேன். நபியவர்கள் அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள். 


4507. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு "தீங்கிழைக்கக்கூடிய பிராணி" (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 
Book :39

4508. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லிக்கு "ஃபுவைசிக்" ("தீங்கிழைக்கக்கூடியது") என்று (பெயர்) குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்லும்படி உத்தரவிட்டதை நான் கேட்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. 
Book :39


4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book :39

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக