வியாழன், 26 மார்ச், 2015

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!
- ஜஅஃபர் நிஸா பின்த் ஷேக் ஃபரீத்

அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம்தான்.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)

அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு. பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை. ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடுதான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.

மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:142)

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி (657)

தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பதுதான்.


நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர்.
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?

இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!
குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள்.  (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)


புதன், 25 மார்ச், 2015

அபூலஹபின் கைகள் அழிந்தன


1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். (அல்குர்ஆன் 111:1)

111:1   تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

அபூலஹபின் கைகள் அழிந்தன என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். "உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். நூல்: புஹாரி (5101)

புஹாரியில் இடம் பெற்ற இந்த ஹதீஸ் அபூலஹப் விரல்களுக்கு தண்ணீர் புகட்டப்படுகிறது என்று சொல்கிறது.

*** வஹி ஒன்றுடன் ஒன்று முரண்படாது! ***

53:3   وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. (அல்குர்ஆன் 53:3)





53:4   إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ 
அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 53:4)

என்று அல்லாஹ் சொல்லியிருக்க, அதனுடன் ஹதீஸ் என்ற பெயரில் ஏதாவது முரண்பட்டு வந்தால் அது புஹாரியில் வந்தாலும் அது ஹதீஸே இல்லை என்பதே சரியான கொள்கையாகும். 


மறுமை நாளின் அடையாளமாக கஅபா இடிக்கப்படுவது உண்மையா?

மறுமை நாளின் அடையாளமாக கஅபா இடிக்கப்படுவது உண்மையா?

? மறுமையின் பத்தாவது அடையாளமாக கஅபா இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உண்மையா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?
ஹஸன் பரீத், திருச்சி
பதில்
நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீங்கள் என்ன உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இறுதி நாளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் என்ற நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதற்கு முன்னால் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது ஏற்படாது, 1. புகை, 2. தஜ்ஜால், 3. அதிசய மிருகம் 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் 5. ஈஸா (அலை) இறங்குதல் 6. யஃஜூஜ் மஃஜூஜ் 7,8,9. கிழக்கு, மேற்கு மற்றும் அரபிய தீபகற்பத்தில் ஏற்படும் மூன்று பூகம்பங்கள் 10. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து மக்களை அவர்களது மறுமையின் பக்கம் துரத்திச் செல்லும் நெருப்பு ஆகியவை ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் உஸைதுல் கிஃபாரி (ரலி)
நூல் : முஸ்லிம் 5558
கியாமத் நாளின் பத்து அடையாளங்களைக் குறிப்பிடும் ஹதீஸ் இது தான். இந்தப் பத்து அடையாளங்களில் கஅபா இடிக்கப்படுவது குறிப்பிடப்படவில்லை. எனினும் கஅபா இடிக்கப்படும் என்று தனியாக ஹதீஸ் உள்ளது.
"(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 1595
"அபிஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்து பாழ்படுத்துவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1591, 1596
இந்த ஹதீஸ்களில் கியாமத் நாள் வரும் போது கஅபா இடிக்கப்படும் என்று கூறப்படாவிட்டாலும் பின்வரும் ஹதீஸ் அந்த விளக்கத்தைத் தருகின்றது.
"யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி 1593
கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் ஒன்றான யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் தோன்றிய பிறகு தான் கஅபா இடிப்பு நடைபெறும் என்பதால் இதுவும் கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று தான் என்பதை அறிய முடிகின்றது.

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

செவ்வாய், 24 மார்ச், 2015

மறுமையில் சஹாபாக்கள் பற்றி ரஸூலுல்லாஹ்

3447. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்" என்று கூறிவிட்டு, பிறகு, 'எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்" என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், 'இவர்கள் என் தோழர்கள்" என்று கூறுவேன். 'இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்" என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, '(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகிவிட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்" (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
கபீஸா இப்னு உக்பா(ரஹ்) கூறினார்: 
தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள் தாம்! அபூ பக்ர்(ரலி) (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.