ஞாயிறு, 19 மார்ச், 2023

ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் மிக அடிப்படையானதும், அவசியமானதும் எது?

  அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் அழகிய வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும் எப்படி அணுகவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ள இஸ்லாம், தினசரி நேரக் கணக்குகளை சூரியனை அடிப்படையாக வைத்தும், மாதக் கணக்குகளை சந்திரனை அடிப்படையாக வைத்தும் தீர்மானிப்பதை நமக்கு சொல்லித் தருகிறது. 

இதில் சூரியக் கணக்கு என்பது ஒரு நாளின் ஐவேளைத் தொழுகை நேரங்களை வரையறுப்பதற்கு நேரங்காட்டியாகவும், சந்திரக் கணக்கு என்பது நோன்பின் நாட்கள், ஹஜ்ஜுடைய நாட்கள், இத்தாவின் நாட்கள் மற்றும் சில இபாதத்துகளின் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு காலங்காட்டியாகவும் பயன்படுத்த இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்.. ரமலானை ஆரம்பிப்பதற்கும்,  ரமலான் மாதம் முடிந்து ஷவ்வாலின் முதல் நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை (அதாவது நோன்புப் பெருநாளை) அறிந்துக் கொள்வதற்கும் பிறைப் பார்ப்பது மிக அவசியம். ஏனெனில், 'ஒவ்வொரு பகுதியிலும் பிறைக் காணப்பட வேண்டும்; பிறை தென்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகிவிட்டது; தென்படாவிட்டால் அம்மாதத்தின் நாட்களை முப்பது என்று நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்' என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள மிகத் தெளிவான சட்டமாகும்.