ஞாயிறு, 10 ஜூன், 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?