வியாழன், 7 ஜனவரி, 2016

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்
தொடர் 1
அப்துல் கரீம் MISc
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஏற்கக் கூடாது என்று நாம் கூறிவருகிறோம்.
இதன் கருத்து ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மேலோட்டமாக முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே அந்தச் செய்திகளை எல்லாம் மறுத்து விடவேண்டும் என்பதல்ல. அவ்வாறு நாம் கூறவில்லை.
மாறாக குறிப்பிட்ட குர்ஆன் வசனத்திற்கும், ஹதீஸிற்கும் இடையில் முரண்பாட்டை களையும் விதமாக ஏதும் விளக்கம் அளிக்க இயலுமா? என முடிந்த வரை ஆய்வு செய்ய வேண்டும்.
அது தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி முழுமையான ஆய்வு பார்வையை அந்த ஹதீஸ்களில் செலுத்திட வேண்டும்.
முரண்பாட்டை களையும் விதத்தில் தெளிவான விளக்கத்தை யாரும் அளித்திருப்பார்களேயானால் அதையும் பரிசீலிக்க வேண்டும்.
இப்படி முரண்பாட்டை நீக்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அந்த வழிகள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னரும் இதற்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிய வரும்போது மாத்திரமே குர்ஆனுக்கு முரண்படும் அந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுக்க வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் இப்படி முடிவெடுப்பதே நமது ஈமானிய சிந்தனைக்கு உகந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும்.
இதுதான் நமது கொள்கை நிலையாகும். நமது நிலைப்பாடு இதுவாக இருக்க, ஒரு சிலர் வேண்டும் என்றே நம்மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திட முனைகின்றனர்.
முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே மறுக்கும் ஆயுதத்தை கையிலெடுத்து விடுகிறார்கள் என்பதுதான் இவர்கள் நம்மீது பதிய முயற்சிக்கும் புதிய முத்திரையாகும்.
இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான போலி முத்திரை. ஏனெனில் மேலோட்டமாக குர்ஆனுக்கு முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும் எண்ணற்ற ஹதீஸ்களை சரியான விளக்கம் அளித்து இணக்கம் காணவே செய்கிறோம். அந்த ஹதீஸ்களை எல்லாம் சரியான விளக்கத்தோடு மக்களிடையே இவர்களை விட பன்மடங்கு வீரியத்துடன் பிரச்சாரம் செய்யவே செய்கிறோம்.
(இதனடிப்படையில் நாமே ஹதீஸ் காப்பாளர்கள். நம்மை விமர்சிப்பவர்கள் தங்களை ஹதீஸ் காப்பாளர்களாகப் பிதற்றிக் கொள்வதில் ஊசி முனையளவும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்.)
சரி. நீங்கள் சொல்வதைப் போன்று எத்தனை ஹதீஸ்களை முரண்பாட்டை களைந்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள்?
விளக்கம் கொடுத்து இணக்கம் காணும் ஹதீஸ்களின் பட்டியலைத் தர இயலுமா? என்றால் மிக அதிகமாகவே நம்மால் குறிப்பிட இயலும்.
அவற்றை அறியத்தருவது தான் இக்கட்டுரையின் முதற்கண் நோக்கமும் கூட என்றாலும் அதற்கு முன் முன்னோட்டமாக சில விஷயங்களை அறிந்து கொள்வது நலம்.
குர்ஆன் வசனத்திற்கு ஒரு ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றம் அளிக்க என்ன காரணம்? முரண்பாடு என்று எதனைக் குறிப்பிடுவது? என்பன போன்ற அடிப்படை தகவலை அறிந்து கொண்டால் இது தொடர்பான நம் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள அது உதவும்.
இனி விஷயத்திற்கு வருவோம். துவக்கமாக முரண்பாடு தோன்ற என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதை சில உதாரணங்களுடன் காண்போம்.
முரண்பாடு தோன்ற முதலாவது காரணம்
குர்ஆன், ஹதீஸ் என இரு மார்க்க ஆதாரங்களில் ஒன்று பொதுவான வாசக அமைப்பிலும் மற்றொன்று குறிப்பான வாசக அமைப்பிலும் வரும்.
இந்நேரத்தில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும்.
அதாவது பொதுவாகச் சொல்லப்பட்டதற்கு எதிராக குறிப்பாக சொல்லப்பட்டது முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும்.
அதேபோல  சில நேரத்தில் சட்டம் சொல்லும் வாசக அமைப்பு பொதுவாக வரும். ஆனால் அங்கே வாசக அமைப்பு கவனிக்கப்படாமல் யாருக்கு சொல்லப்பட்டது என்று குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
இதை பகுத்துப் பார்க்காத தருணங்களிலும்  முரண்பாடு எட்டிப்பார்க்கும்.
கருத்தை மட்டும் கவனிப்பதாலே முரண்பாடு போல் தோற்றமளிக்கும் இந்த நிலை ஏற்படுகிறது. நுணுக்கமாக அணுகினால் உண்மையில் இவ்வித ஆதாரங்களுக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறியலாம்.
இதை வார்த்தையாக சொல்லிக் கொண்டு வந்தால் ஒன்றும் புரியாததை போல இருக்கும். எனவே பின்வரும் வசனத்தையும் அதையடுத்த விளக்கத்தையும் ஆழ்ந்து படியுங்கள்.
ஒரு குற்றத்திற்கு இருவுலக தண்டனையா?
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 
அல்குர்ஆன் 5 33
அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் புரிபவர்களுக்கு கொல்லப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் போன்ற உலக ரீதியான தண்டனைகள் வழங்கப்படும். அத்துடன் முடிந்து போகாமல் மறுமையிலும் அவர்களுக்குத் தண்டனை உண்டு என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.
இவ்வசனத்தைப் பொதுவாக நோக்கும்போது ஒருவனுக்கு தான் செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டால் அது அவனுக்கு போதுமானதாக அமையாது, மாறாக அவன் மறுமையிலும் தண்டிக்கப்படுவான் என்கிறது. உலகத்தில் குற்றத்திற்குரிய தண்டனை பெறுவதால் மறுமையின் தண்டனையிலிருந்து தப்ப இயலாது எனும் கருத்து இவ்வசனத்தில் வெளிப்படுகிறது.
ஆனால் பின்வரும் நபிமொழியை வாசித்தால் மேற்கண்ட குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரணான கருத்து அதில் சொல்லப்பட்டதை உணரலாம்.
'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித்  (ரலி),
நூல் : புகாரி 18
ஒரு குற்றத்திற்காக உலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அக்குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்று இந்நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.
குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்றால் மறுமையில் தண்டனை இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்.
இதனடிப்படையில் முதலில் பார்த்த வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் தென்படுகிறது.
உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அது பரிகாரமாகாது, மாறாக மறுமையிலும் தண்டனை கிடைக்கும் என்று குர்ஆன் கூறுகிறது.
உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அதுவே பரிகாரமாகி விடும் என்று நபிமொழி கூறுகிறது.
இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோற்றமளிக்க நாம் மேலே சொன்ன தவறான அணுகுமுறையே காரணம்.
அதாவது எது பொதுவாகச் சொல்லப்பட்டது? எது குறிப்பாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பகுத்து அறியாமல் குறிப்பாக சொல்லப்பட்டதை பொதுவாக்குவதே இம்முரண்பாட்டிற்கான காரணியாகும்.
முதலில் குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது?
அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 
(அல்குர்ஆன் 5 : 33)
அல்லாஹ், ரசூலுடன் எதிர்த்து போர் செய்பவர்களுக்கு உலகத்திலும் தண்டனை உண்டு, மறுமையிலும் தண்டனை உண்டு என்று இவ்வசனம் சொல்கிறது.
இதை வைத்துக் கொண்டு செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும் அது பரிகாரமாக அமைவதில்லை. மாறாக மறுமையிலும் தண்டனை உண்டு என்று பொது சட்டம் எடுத்து அதை அனைவருக்கும் பொருத்தியதே இதற்கான காரணமாகும்.
ஏனெனில் இவ்வசனம் அல்லாஹ், ரசூலை எதிர்த்து போர் செய்யும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுகிறது.
அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை
(அல்குர்ஆன் 5 : 33)
இவ்வசனத்தின் துவக்கத்தில் அல்லாஹ் ரசூலுடன் போர் செய்பவர்களின் தண்டனை என்று துவங்குகிறது.
காபிர்களே அல்லாஹ் ரசூலுடன் போர் செய்ய முன்வருவார்கள். எனவே இவ்வசனம் இறை மறுப்பாளர்களை பற்றி குறிப்பிடுகிறது என்பது தெளிவு.
இறை மறுப்பாளர்கள் இவ்வுலகத்தில் தண்டனை பெற்றாலும் அவர்களிடம் இணை வைப்பு இருக்கிற காரணத்தினால் மறுமையில் தண்டனை பெறுவதிலிருந்து தப்ப இயலாது. எந்தக் குற்றத்திற்காக அவர்கள் உலகில் தண்டிக்கப்பட்டாலும் குஃப்ர் இருக்கிற காரணத்தினால் மறுமையிலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்கவே செய்வார்கள்.
எனவேதான் அல்லாஹ் இத்தகைய காபிர்களுக்கு மறுமையிலும் பெரும் வேதனை உள்ளது என்று கூறுகிறான்.
ஆனால் உபாதா ரலி அறிவிக்கும் நபிமொழியோ முஸ்லிம்களைப் பற்றி விவரிக்கின்றது.
ஹதீஸின் துவக்கம் கூட ஷிர்க் வைக்க மாட்டோம் என்று என்னிடத்தில் பைஅத் செய்யுங்கள் என்றே துவங்குகிறது.
'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல் : புகாரி 18
நபிகள் நாயகத்திடம் இவ்விதமாக பைஅத் செய்பவர் சர்வ நிச்சயம் முஸ்லிமாகவே இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அத்தகைய முஸ்லிம் ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து அதற்காக இவ்வுலத்தில் தண்டனையையும் பெற்று விடுவாரேயானால், அத்தண்டனை அவரது குற்றத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும் என்று நபிகள் நாயகம் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி இதில் தெரிவிக்கின்றார்கள்.
சுருக்கமாகச் சொல்வதெனில் ஒரு குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை பெற்றால் அதுவே பரிகாரமாக அமைந்து விடும் என்பது முஸ்லிம்களுக்கானது. இறை மறுப்பாளர்களுக்கானது அல்ல.
உலகத்தில் வழங்கப்படும் தண்டனையோடு சேர்த்து மறுமையிலும் பெரும் வேதனை உண்டு என்று அல்லாஹ் சொல்வது இறை மறுப்பாளர்களுக்கானது. முஸ்லிம்களுக்கானது அல்ல.
இப்படி காஃபிர்களுக்கு சொல்லப்பட்டதை அனைத்து மக்களுக்குமான பொது சட்டம் என்றும் முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டதை காபிர்கள் உட்பட அனைவருக்கும் உரியது எனவும் தவறாகப் புரிந்து கொள்வதே இந்தத் தற்காலிக முரண்பாட்டிற்கான காரணமாகும்.
எது குறிப்பாக சொல்லப்பட்டது? எது பொதுவாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பிரித்து அறியும்போது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கும் நபிமொழிக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.
இதே பாணியில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல இயலும் என்றாலும் முரண்பாடு தோன்ற இது முதற்காரணம் என்பதை விளங்கிக் கொள்ள இவ்வுதாரணம் ஒன்றே போதுமானது.
இரண்டாம் காரணம்
குர்ஆன், ஹதீஸிற்கு இடையில் மேலோட்டமாக முரண்பாடுபோல் காட்சியளிக்க மற்றுமொரு காரணம் என்னவெனில் இரு ஆதாரங்களில் ஒன்று பொதுவானதாகவும், மற்றொரு ஆதாரம் நிபந்தனையுடன் சொல்லப்பட்டதாகவும் அமையப் பெற்றிருக்கும்.
பொதுவாகச் சொல்லப்பட்டதை - நிபந்தனையுடன் சொல்லப்பட்டதுடன் ஒப்பு நோக்கி ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம்.
இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.
பொதுவாக சொல்லப்பட்ட அந்த ஆதாரத்தைப் பொதுவாக எடுக்காமல்  மற்றொரு ஆதாரத்தில் சொல்லப்பட்ட நிபந்தனையை எடுத்து அதில் பொருத்தி எடுத்துக் கொள்வோமேயானால், மெலிதாக எட்டிப்பார்த்த முரண்பாடு முழுமையாய் மறைந்து போவதைப் பார்க்கலாம்.
இவ்வித முரண்பாடு எப்படித் தோன்றி, மறைகிறது என்பதையும் உதாரணங்களின் மூலம் அணுகுவோம்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 5 : 6)
தொழுகைக்காக தயாராகும் அனைத்து முஃமின்களும் உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக இவ்வசனம் கட்டளையிடுகிறது.
அதாவது ஒவ்வொரு முறை தொழுகைக்குத் தயாராகும் போதெல்லாம் உழு செய்ய வேண்டும் எனும் கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
ஆனால் பின்வரும் நபிமொழியை மோலோட்டமாக அணுகும் போது மேற்கண்ட வசனத்திற்கு முரண்போல் தோன்றும்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது
அறிவிப்பவர் : புரைதா ரலி,
நூல் : முஸ்லிம் 466
இந்த நபிமொழியில் பல தொழுகைகளை நபிகள் நாயகம் ஒரு உழுவில் தொழுதுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
ஒரு தொழுகைக்குத் தயாராகும்போது நபிகள் நாயகம் உழு செய்துள்ளார்கள். ஏனைய தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை. முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள் என்பது இதன் பொருள்.
இதன்படி பார்க்கும்போது தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் கட்டளைக்கு மாற்றமாக நபியவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.
குர்ஆன் வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் உள்ளது போன்று வெளிப்படையில் தோன்றுகிறது.
தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் பொதுக் கட்டளைக்கு  முரணாக பின்வரும் நபிமொழியும் அமைந்துள்ளதை உணரலாம்.
'கைபர் போர் நடந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். 'ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்"
அறிவிப்பவர் ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி),
நூல் : புகாரி 215
(இப்படி பல செய்திகள் உள்ளது. உதாரணத்திற்கு இரு செய்திகளை பதிந்துள்ளோம்.)
ஆக தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
ஆனால் நபிகள் நாயகமோ தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யவில்லை. (முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள்.) உழு இருந்தாலும் இந்தத் தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை எனும் கருத்தில் முரண்பாடு போல் உருவகம் ஏற்படுகிறது.
உண்மையில் இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.
ஏனெனில் தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் என்ன நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.
உழு இல்லாமல் இருக்கும் நிலையில் என்பது தான் இந்த நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனையாகும்.
நிபந்தனை சொல்லப்படாமல் பொதுச் சட்டம் கூறும் வசனத்தை (அல்குர்ஆன் 5 6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நமக்கு எடுத்துரைத்தார்கள்.
நபிகள் நாயகம் அதற்குரிய செயல் விளக்கமாக ஒரு உழுவில் பல தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள் என்றால் இதன் மூலம் நமக்கு பொதுச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய ஒரு நிபந்தனையை விளக்கித் தருகிறார்கள்.
உழு இல்லாமல் இருக்கும் நிலையில் தொழுகைக்கு தயாராகும் போதுதான் உழு செய்து கொள்ள வேண்டும்.
உழு இருக்கும் நிலையில் தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யத் தேவையில்லை.
தொழுகைக்கு தயாராகும் போது உழு செய்ய  வேண்டும் என்று அவ்வசனம் குறிப்பிடுவது உழு இல்லாமல் இருக்கும்போதுதான் எனும் நிபந்தனையை தம் செயல் மூலம் நமக்கு விளக்கித் தருகிறார்கள்.
எனவே பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிபந்தனையைப் பொருத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லாமல் போகிறது
இதே விஷயத்தை பின்வரும் விவகாரத்திலும் பார்க்கலாம்.
பாலூட்டிய அன்னையர்கள் திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க, அல்குர்ஆன் 4 : 23)
இவ்வசனம் பொதுவாகவே உள்ளது. எத்தனை முறை பாலூட்டியிருக்க வேண்டும் என்று எந்தத் தகவலும் இல்லை.
இந்த வசனத்தின்படி ஒரு முறை, ஒரு மிடறு அருந்தினால் கூட அப்பெண்மணி அவரது வாரிசுகள் திருமணம் முடிக்கத் தடை என்று கருத்து வரும். ஏனெனில் வசனத்தில் இத்தனை முறை என்றோ - இந்த அளவு என்றோ - இத்தனை வயதில் என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை.
ஆனால் நபிமொழிகளில் பார்க்கும்போது இவ்வசனத்தில் சொல்லப்பட்ட சட்டத்திற்கான நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் மூன்று தடவைகள் பாலருந்த வேண்டும்.
வயிறு நிரம்ப அருந்த வேண்டும்.
இரண்டு வயதிற்குள் பாலருந்தியிருக்க வேண்டும் என்று ஹதீஸ்களில் நிபந்தனைகளை நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, "நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்'' எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர் உம்முல் ஃபள்ல் (ரலி),
நூல் : முஸ்லிம் 2870
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால் குடிகாலம் 2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
நூல் : திர்மிதி (1072)
குர்ஆனில் சொல்லப்பட்ட பொதுச்சட்டத்தை அப்படியே அணுகாமல் நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளுடன் பொருத்தி அணுக வேண்டும் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு.
இந்த விஷயத்தை அப்படி அணுகவில்லையென்றால் என்னவாகும்?
பாலருந்தி விட்டால் திருமணம் முடிக்க ஹராம் என்று திருக்குர்ஆன் பொதுவாகச் சொல்கிறது.
ஆனால் ஹதீஸோ இரண்டு முறை பாலருந்தினாலும் ஹராம் என்பது ஏற்படாது என்று குர்ஆனுக்கு முரணாக சட்டம் கூறுகிறது என்று முரண் கற்பிக்க ஆரம்பித்து விடுவோம்.
எனவே குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் மத்தியில் முரண்போன்ற பிம்பம் ஏற்பட பொதுவாக சொல்லப்பட்ட ஒரு ஆதாரத்தை நிபந்தனையுடன் சொல்லப்பட்டுள்ள ஆதாரத்துடன் இணைத்து புரியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்பதை இதன் மூலம் விளங்கி கொள்ள வேண்டும்.

.....................................................................................................................................................................................................................
முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்
முரண்படக் காரணம் என்ன?
தொடர் 2
அப்துல் கரீம், MISc
அறிவிப்பாளர்கள் செய்யும் தவறு  - மூன்றாம் காரணம்
குர்ஆன், ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்படும் படியான போலித்தோற்றம் ஏன் தோன்றுகிறது என்பதற்கான காரணங்களை பார்த்துவருகிறோம். சென்ற தொடரில் இரு காரணங்களை அதற்குரிய உதாரணங்களுடன் விரிவாகக் கண்டோம். இனி அடுத்தடுத்த காரணங்களைக் காண்போம்.
அறிவிப்பாளரின் தவறால் முரண்பாடாகத் தோன்றும்
சில தருணங்களில் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் செய்கிற தவறும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடும்.
ஒரு அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்து விடுவார். 
இன்னும் சில நேரத்தில் அந்த மொத்த செய்தியையே நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் அறிவிப்பாளரின் தவறினால்அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு சொல்லப்பட்ட வாசகம் மற்றும் செய்தி குர்ஆனோடு மோதும் வகையில் மல்லுக்கட்டி கொண்டு நிற்பது மட்டுமின்றி நமக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
இது போன்ற செய்திகளைச் சற்று கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்து, சிக்கலை ஏற்படுத்தும் அச்சொல் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் அப்போது உதயமான முரண்பாடு அடுத்த வினாடியில் அஸ்தமனமாகிவிடும்.
இதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்.
ஒருவர் பாவத்தை மற்றவர் சுமப்பாரா?
ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடச் சொல்கிறது.
"அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6 164
அவர்கள், சென்றுவிட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2 134
மேலும் பார்க்க அல்குர்ஆன் 17 15, 35 18, 39 7
குர்ஆன் கூறும் இந்த அடிப்படை சித்தாந்தத்திற்கு மாற்றமாக, முரணாக சில ஹதீஸ்களின் சொற்பிரயோகங்கள் உள்ளதை பின்வரும் செய்தியின் வாயிலாக அறியலாம்.
 (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான்"அருமை மகளே! பொறுமையாக இரு! "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?'' என்று கேட்டேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் 1687
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 1688.
ஒருவர் செய்த பாவத்திற்கு இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று குர்ஆன் கூறுகிறது.
ஆனால் குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார், அதாவது குடும்பத்தார் செய்த பாவத்திற்காக? சம்பந்தமே இல்லாத இறந்தவர் தண்டிக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தெளிவான முரண்பாடாகும்.
ஆழ்ந்த சிந்தனையோடு இதை அணுகவில்லையென்றால் குர்ஆனை விளக்குவதற்காக வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஏன் குர்ஆனுக்கு முரணாக இவ்வாறு சொன்னார்கள் என்று நாம் இடியாப்ப சிக்கலில் சிக்கி, முரண்பாட்டிலேயே உழன்று கொண்டிருப்போம்.
இந்த முரண்பாடு தோன்றியதற்கு அடிப்படைக் காரணம், நபிகளார் சொல்லாததை நபியின் சொல்லாக அறிவிப்பாளர் தவறுதலாக அறிவித்ததேயாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்.
"குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனைசெய்யப்படுகின்றார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :  உர்வா பின் ஸுபைர் (ரஹ்), நூல் : புகாரி 3978
அதாவது குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்பது நபியின் வார்த்தை அல்ல.
பாவத்தின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தார்களோ அழுது கொண்டிருக்கிறார்கள் என்று தான் நபிகள்நாயகம் (ஸல்) கூறினார்கள்.
இந்த வாசகத்தை மாற்றியமைத்து குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று அறிவிப்பாளர் தவறுதலாகக் கூறிவிட்டார்.
தவறாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தைதான் குர்ஆனோடு முரண்பட்டு நிற்கின்றது. நபியின் கூற்று முரண்பட்டு நிற்கவில்லை.
அறிவிப்பாளரால் தவறுதலாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தையை நபியின் வார்த்தை என்று எடுத்துக் கொள்வதால் குர்ஆனுக்கு முரணாக நபியின் சொல் அமைந்துவிட்டதுபோல தோற்றம்  ஏற்பட்டு விடுகிறது.
ஆக இங்கே தீராத முரண்பாடு தோன்றுவதற்கு அறிவிப்பாளர்கள் அறியாமல் செய்த தவறே பிரதான காரணமாக அங்கம் வகிக்கின்றது என்பதைப் புரியலாம்.
அது அறிவிப்பாளரிடமிருந்து ஏற்பட்ட தவறு என்பது புலப்படும் போது முரண்பாடு இல்லாமல் போய் விடுகிறது.
அறிவிப்பாளரின் தவறினாலும் முரண்பாடுகள் முளைக்கின்றன என்பதற்கு உதாரணமாக பின்வரும் நபிமொழியையயும் குறிப்பிடலாம்.
சகுனம் உண்டா?
நன்மை, தீமை எல்லாமே ஏற்கனவே இறைவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றது. அல்லாஹ் ஏற்படுத்திய விதியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
இக்கருத்து பல குர்ஆன் வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:47
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9 51
இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது.இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
அல்குர்ஆன் 57 22
இந்தக் குர்ஆன் வசனங்களோடு மோதும் வகையில் பின்வரும் செய்தி அமைந்துள்ளது.
"அபசகுனம் என்பது குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே. என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி 2858
சகுனம் பார்க்கக் கூடாது, எல்லாமே இறைவிதிப்படி நடக்கின்றது என்று குர்ஆனும், இல்லையில்லை,  சிலவற்றில் சகுனம் பார்க்கலாம் என்று நபிமொழியும்  ஒன்றுக் கொன்று முரண்படான கருத்தை போதிக்கின்றது.
(குறிப்பு சகுனம் பார்த்தல் இணை வைத்தலாகும் என்று நபிகளாரே கூறிவிட்டபடியால், இணை வைப்பில் விதிவிலக்கு இருக்காது என்பதை கவனத்தில் கொள்க.)
இத்தகைய முரண்பாட்டிற்கும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்ட தவறே காரணமாகும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் நபியின் சொல்லை சரியாக அறிவிக்காததும் நபி சொல்லாததை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்ததுமே இதற்குக் காரணம் என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
 அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்), நூல் : அஹ்மத் (24894)
குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் உண்டு என நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்டதவறு என்றும் அறியாமைக் காலத்தில் இந்த மூன்றிலும் மக்கள் சகுனம் பார்த்து வந்தார்கள் என்பதைத்தான் நபியவர்கள் கூறினார்கள் என்றும் அன்னை ஆயிஷா விளக்கமளிக்கின்றார்கள்.
 மூன்றில் சகுனம் உண்டு என்று நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் தவறே என்பதை அனைத்து அறிஞர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இப்படி அறிவிப்பாளர்கள் செய்யும் அறியாப் பிழையும் குர்ஆனோடு சில ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்க  முக்கிய காரணமாகும்.
சொல்லப்போனால் அதிகமான ஹதீஸ்களுக்கிடையில் பொய்யான முரண்பாடு தோன்ற இந்த வகை காரணமே அதிகமானது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்து கொள்கிறோம். அறிவிப்பாளர்களின் பிழைகள் கண்டுணரப்படும்போது இந்த வகை முரண்பாடுகள் இயல்பாக கழன்று போகும்.
மாறுபட்ட சூழல் - நான்காம் காரணம்
முரண்பாடு தோன்ற இன்னொரு காரணம் செய்தி சொல்லப்பட்ட சூழலை நாம் அறியாமல் இருப்பதாகும்.
இரண்டு வெவ்வேறு, காலச் சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரண்டு செய்திகளை ஒரே சூழலில் சொல்லப்பட்டதைப் போன்று பொதுவாக ஒப்பு நோக்கிப் பார்ப்பது, தெளிவற்ற முரண்பாடு தோன்ற காரணமாக உள்ளது.
ஒரு பொருளுக்கு ஒரு சூழ்நிலையில் ஒரு சட்டமும், வேறு ஒரு சூழ்நிலையில் அதற்கு மாற்றமான சட்டமும் சொல்லப்பட்டிருக்கும்.
இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட இரு சட்டங்களை ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரு சட்டங்களைப் போன்று பார்த்தால் முரண்பாடாகத்தான் தெரியும். இரண்டையும் பிரித்து அணுகும் போது முரண்பாடு அற்றுப் போவதை கண்கூடாகக் காணலாம்.
குர்பானி இறைச்சியை சேமிக்கக் கூடாதா?
பின்வரும் நபிமொழிகள் மூன்று நாள்களுக்கு மேல் குர்பானி இறைச்சிகளை சேமித்து வைக்கக் கூடாது என்று தடை செய்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரும் தமது குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 3984
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்குமுன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானிஇறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்),
நூல் : முஸ்லிம் 3982
மேற்கண்ட நபிமொழிக்கு முரணாக இறைச்சியை அதிக நாள்கள் சேமித்து வைக்க நபிகள் நாயகம் அனுமதி வழங்கியதாக மற்றொரு செய்தி கூறுகிறது.
நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்து வந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்:  முஸ்லிம் 3989
மேலோட்டமாக இந்த இரு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் முரண் இருப்பதைப் போன்று எண்ணத்தோன்றும்.
ஆனால் உண்மை நிலை என்னவெனில், இரண்டு சட்டங்களும் இரு வேறு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதாகும்.
ஏழை மக்கள் பசி பட்டினியுடன் கிடந்த காலச்சூழ்நிலையில் இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து உண்ணக் கூடாது என்று நபியவர்கள் தடுத்தார்கள். அப்போதுதான் அந்த இறைச்சிகள் மூலம் ஏழைகள் பயன் அடைவார்கள் என்பதற்காக இப்படியொரு ஏற்பாடு.
பசி, பட்டினி காலம் இல்லாமற்போய், வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்ட போது இனி குர்பானி இறைச்சிக்கு அத்தகைய எந்த வரையறையும் சட்டமும் இல்லை, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் சேமித்து வைத்து சாப்பிடலாம் என்ற பொது சலுகையை வழங்கி விட்டார்கள்.
இந்த விளக்கம் நம்முடைய சொந்த விளக்கம் அன்று.
ஹதீஸ்களில் நபிகள் நாயகமே இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானிஇறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்ற வற்றை அருந்தாதீர்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம் 1778
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அல்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு)வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்'' என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ணவேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்து வையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 3986
குர்பானி இறைச்சியை சேமித்து வைக்கக் கூடாது என்பதும், சேமித்து வைக்கலாம் என்பதும் இரு வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட செய்திகளாகும். இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதைப் பிரித்தறியாமல் ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்டதைப் போன்று அணுகுவோமேயானால் அப்போது மங்கலான முரண்பாடு தோன்றுவதைத் தவிர்க்க இயலாது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதற்கு மற்றொரு உதாரணமாகப் பின்வரும் செய்தியையும் குறிப்பிடலாம்.
நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கலாமா?
நபிமார்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாகவும், ஒரு நபிக்கு இல்லாத சிறப்புகள், உயர் அந்தஸ்துகள் சில நபிமார்களுக்கு தான் வழங்கியிருப்பதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.
இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம்.
அல்குர்ஆன் 2 253
வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை விட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம்.தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதத்தைக்) கொடுத்தோம்.
அல்குர்ஆன் 17 55
நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு உண்டு என்கிற கருத்து இதில் வெளிப்படுகிறது.
பின்வரும் வசனம் இன்னும் தெளிவாக இக்கருத்தை வெளிப்படுத்துகிறது.
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
அல்குர்ஆன் 68 48,49,50.
இப்படி அனைத்து இறைத்தூதர்களும் சமமான அந்தஸ்தில் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக பின்வரும் நபிமொழிகளை பார்க்கும்போது இதற்கு முரணான கருத்து தொனிப்பதை கவனிக்கலாம்.
"அல்லாஹ்வின் தூதர்களுக்கிடையில் ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6916
நபிமார்கள் அனைவரும் சமமான அந்தஸ்த்தில் இல்லை, அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
அதற்கு மாற்றமாக நபிமார்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று இந்நபிமொழிகள் சொல்கின்றன.
இதனடிப்படையில் பார்க்கும்போது அல்லாஹ் எந்த நபிமார்களுக்கு தனிச்சிறப்பை வழங்கியிருக்கிறானோ அவற்றை குறிப்பிடக் கூடாது என்பது போன்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை என 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அதுபோல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்று2:124, 2:125, 4:125, 11:73, 16:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மறுமையில் மகாமு மஹ்மூத் எனும் புகழத்தக்க மதிப்பை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குவான் என 17:79 வசனம் கூறுகிறது.
ஹவ்லுல் கவ்ஸர் எனும் நீர்த்தடாகம் நபியவர்கள் பொறுப்பில் விடப்படும் என 108:1 வசனம் கூறுகிறது.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க:புகாரி: 99, 335, 438, 3340)
இப்படி பல்வேறு இறைத்தூதர்களுக்கு தனிச்சிறப்புகளை இறைவன் வழங்கியிருக்கிறான். இவற்றைக் குறிப்பிட்டு சொல்வதும் கூட தவறு என்ற மறைமுகக் கருத்து மேற்கண்ட நபிமொழியில் உள்ளது.
ஏனெனில் ஒருவருக்கான சிறப்பை எடுத்துச் சொல்லும்போது அது இன்னொருவருக்கு இல்லை என்கிற கருத்தையும் சேர்த்தே சொல்கிறோம். இந்த வகையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைப் போன்று தெரிகின்றது.
இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று கூறும்  நபிமொழிகளும், ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்று பல திருக்குர்ஆன் வசனங்களும் கருத்து தெரிவித்து ஒன்றுக் கொன்று முரண்பட்டு நிற்பதைப் போல வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.
இந்த முரண்பாடு தோன்றுவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொள்ளாதது ஒரு காரணமாகும். ஏனெனில் நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது குறிப்பிட்ட ஓர் சூழலில் சொல்லப்பட்டது. அது எந்தச் சூழல் என்பது தெரியவரும் போது எது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாகும்? எம்மாதிரியான ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை விளங்கி விடலாம்.
இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சூழலில் இதை கூறினார்கள் என்பதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக)மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே, நபி (ஸல்)அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414
ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி இன்னொரு இறைத்தூதரை உயர்த்தும் போக்கு இந்த சம்பவத்தில் வெளிப்படுகிறது.
யூதர் நபிகள் நாயகத்தை மட்டம் தட்டி மூஸாவை உயர்த்துகிறார். முஸ்லிமோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை உயர்த்திப் பிடிக்கிறார்.
அதனால்தான் யூதருக்கும் முஸ்லிமுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.
அதுமட்டுமின்றி அல்லாஹ், ரசூல் சொன்ன சிறப்புகளை எடுத்துப் பேசாமல் தங்கள் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு தத்தமது இறைத்தூதர்களை இருவரும் சிறப்பித்து சொல்கிறார்கள் என்பதும் இதில் புரிகிறது.
இது நபிகளாரின் கவனத்திற்கு வரும்போதே இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
நபிகள் நாயகம் சொன்ன செய்தியை இந்தச் சூழலோடு இணைத்து புரியும் போது ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி, அவரை அற்பமாகக் கருதி இன்னொரு இறைத்தூதரை உயர்த்துவதே கண்டிக்கத்தக்கது என்பது தெளிவாகப் பளிச்சிடுகிறது.
மட்டம் தட்டும் நோக்கமின்றி, நாமாக எதையும் சொல்லாமல் இறைவன் யார் யாருக்கு என்னென்ன சிறப்புத் தகுதிகளை வழங்கினானோ அவற்றை அப்படியே குறிப்பிடுவது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாக ஆகாது என்பதையும் இது விளக்கி விடுகிறது.
எனவே எந்த இரு ஆதாரங்கள் முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் அங்கே மாறுபட்ட சூழல் இருக்கின்றதா என்பதிலும் ஒரு கண் வைக்கவேண்டும். இதைக் கவனிக்கும் போது மேலோட்டமாகத் தோன்றிய முரண்பாட்டை எளிதாக அகற்றி விடலாம்.
நேரடிப் பொருளும் இலக்கியப் பொருளும் - ஐந்தாம் காரணம்
குர்ஆன், ஹதீஸ் என இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு தோன்ற மற்றுமொரு காரணம் இலக்கியப் பொருள் அறியாததாகும்.
ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.
இதை பகுத்துணராமல் இரண்டையுமே நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளும் போது முரண்பாடு தலைதூக்கவே செய்யும்.
என்னது இலக்கியம் தெரியாவிட்டால் முரண்பாடு வருமா? இஸ்லாத்திற்கும் இலக்கியத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம்? என்று யோசிக்கிறீர்களா?
முதலில் நாம் கூறும் இலக்கியம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.
கவிஞர்கள், புலவர்கள் இலக்கியம் என்கிற பேரில் யாருக்கும் புரியாத பாஷையில் பிதற்றிக் கொண்டிருப்பார்களே??
நாடக - சினிமா நடிகர்கள் தூய தமிழில் பத்து பக்க அளவில் வசனங்களை மூச்சு விடாமல் ஒப்புவித்துக் கொண்டிருப்பார்களே??
கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாயிருக்கும் என்கிறேன் என்கிற பாணியில் கலைஞர் போன்றவர்கள் கூட அவ்வப்போது உளறுவார்களே?
சர்வ நிச்சயம் இந்த இலக்கியத்தைப் பற்றி நாம் பேசவில்லை. குர்ஆன், ஹதீசும் இதைச் சொல்லவில்லை.
நாம் கூறும் இலக்கியம் எது வென்றால்,
எந்த ஒரு வார்த்தையும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருளிலும் மற்ற சில நேரங்களில் அதன் மறைமுகப் பொருளிலும் பயன்படுத்தப்படும். இந்த வழக்கு எல்லா மொழியிலும் உண்டு.
விலங்குகள் சரணாலயத்தில் சிங்கத்தைப் பார்த்தேன்
தலைவர் ஒரு சிங்கம்
இதில் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள சிங்கம் என்பது நேரடிப் பொருள். அது நான்கு கால் சிங்கத்தையே குறிக்கிறது.
தலைவர் ஒரு சிங்கம் என்பதில் உள்ள சிங்கம் மறைமுகப் பொருள். இது நான்கு கால் சிங்கத்தை குறிக்கவில்லை. மாறாக தலைவர் சிங்கத்தைபோன்று வீரமுள்ளவர் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.
இங்கே சிங்கம் என்பது மறைமுகப் பொருளில் வீரன் எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் அல்லாமல் மறைமுகப் பொருளில் பயன்படுத்தப்படுவதே இலக்கியப் பொருள் என்கிறோம்.
இவை பெரும்பாலும் வர்ணனைகளின் போதே அதிகளவில் இடம்பெறும்.
பெண்ணை நிலா மற்றும் மான் போன்றவைகளுக்கு ஒப்பிடுவதும் இந்த வகையைச் சார்ந்ததே.
அதிகம் பேசுபவனை வாய் நீளம் என்றும் எதற்கெடுத்தாலும் அடிப்பவனை கை நீளம் என்று வர்ணிப்பதும் இலக்கியப் பொருள் கொள்ளும்வகையில் உள்ளதே.
இப்படி குர்ஆனிலும் ஹதீஸிலும் கூட நிறைய உதாரணங்கள் இலக்கியப் பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.
இலக்கியப் பொருள் பற்றி இந்த அளவு புரிந்து கொள்வது போதும்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.
இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நேரடிப் பொருளில் புரியும் போது முரண்பாடு தோன்றுகிறது.
உதாரணத்திற்கு பின்வரும் குர்ஆன், ஹதீஸ் சான்றுகளை கவனியுங்கள்.
மறுமை நாளின் திடுக்கம் எப்போது நிகழும்?
 மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
அல்குர்ஆன் 22 1,2
மறுமை நாளின் திடுக்கத்தில் பாலூட்டும் தாய் தன் குழந்தையை மறந்து விடுவாள், கர்ப்பிணிப் பெண் கருவை ஈன்று விடுவாள் என்று பல நிகழ்வுகள் இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உலகம் அழிந்து மறுமை ஏற்படும் நேரத்தில் இது நிகழும் என்று இவ்வசனத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் இது தொடர்பான ஹதீஸைப் படித்தால் இதற்கு முரணான நேரம் - அதாவது மனிதர்கள் அனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்டு,நரகிற்கு செல்வதற்கு முன் - இம்மாதிரியான திடுக்கிடும் நிகழ்வுகள் ஏற்படும் என்பது போன்று சொல்லப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) "ஆதமே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்'' என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் "(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்''என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் "எத்தனை நரகவாசிகளை?'' என்று கேட்பார்கள். அதற்கு அவன் "ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)'' என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை (பீதியின்காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6530
நரகிற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்திடுங்கள் என்று ஆதம் நபிக்கு அல்லாஹ் சொல்வான் என்று இதில் சொல்லப்படுகிறது.
அப்படியெனில் உலகில் வாழ்ந்து மரணித்த எல்லா மக்களும் எழுப்பப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் போதே இது நடைபெறும் என்று விளங்குகிறது. ஏனெனில் அப்போதுதான் ஆதம் நபியிலிருந்து நரகில் செல்லவிருக்கிற அனைத்து மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள்.
அந்த நேரத்தின் போது தான் கர்ப்பிணிப் பெண் பிரசவித்து விடுவாள் என்றும் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது.
கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகுள்ள நிலையில் எப்படி ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பாள், பாலூட்டும் நிலையில் கையில் குழந்தையுடன் எப்படி இருப்பாள்? கர்ப்பமாக இருந்து குழந்தையைப் பெற்றெடுப்பது, பாலூட்டுவது போன்ற நிலைகள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு இல்லை.
நிலை இவ்வாறிருக்க, மேற்கண்ட செய்தி மக்களனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி கருவை பெற்றெடுப்பதும், பாலூட்டும் தாய் தன் பிள்ளையை மறந்து விடுவதுமான நிகழ்வுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றது.
இத்தகைய முரணான கருத்து தோன்றுவதற்கு அச்சாரமாக விளங்கியது எது?
இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டதுதான்.
அந்தக் குர்ஆன் வசனம் மக்கள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு நடக்கவிருக்கிற நிகழ்வுகளைத் தான் குறிப்பிடுகிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தியை மேலே நாம் கண்டோம். (புகாரி 6530)
ஆனால் கப்ரிலிருந்து உலக மக்கள் அனைவரும் எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி பிரசவித்து விடுவாள், பாலூட்டுபவள் மறந்து விடுவாள் என்று நபி கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் அப்போது ஏற்படும் திடுக்கம் இந்த அளவு பயங்கரமானதாக இருக்கும் என்று மறைமுகப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை அவ்வசனத்தின் இறுதியில் உள்ள வாசகம் தெளிவாக விளக்குகின்றது.
போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனைகடுமையானது.
அல்குர்ஆன் 22 1,2
போதை வயப்பட்டவராக மக்கள் இருப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் உண்மையான போதையில் இருக்கமாட்டார்கள் என்றும் வசனத்தின் இறுதி தெரிவிக்கின்றது.
போதை வயப்பட்டோர் என்பது நேரடிப் பொருள் அல்ல, இலக்கிய பொருள் தான் என்பது இதில் உறுதியாகிறது.
அது போலவே வேதனையின் கடுமை எந்த அளவு உச்சத்தைத் தொடும் என்பதைவிளக்கும் போது,
கர்ப்பிணி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுத்து விடுவாள்.
பாலூட்டும் தாயாக இருந்தால் அவள் கூட தன் குழந்தையை மறந்து விடுவாள்.
அந்த அளவு அல்லாஹ்வின் வேதனை மிகுதியானதாய் இருக்கும்.
இவ்வாறு இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதாக விளங்கிக் கொள்ளலாம்.
நாம் கூட இவ்வாறு பல தருணங்களில் பேசவே செய்கிறோம்.
இவன் படுத்துன பாட்டில் உயிரே போய் விட்டது என்போம்.
என்னப்பா உயிருடன் தான் இருக்கிறாய் ஆனால் உயிரே போய் விட்டது என்கிறாயே என்று யாரும் கேட்டதில்லை, கேட்கவும் மாட்டார்கள்.
உயிர் போகும் அளவு இவன் என்னை துன்புறுத்தி விட்டான் என்பது தான் இந்த வார்த்தையின் பொருள்.
இதே பாணியில் தான் மேற்கண்ட  வசனமும் அதற்கு விளக்கமான ஹதீசும் அமைந்துள்ளது.
இதற்கு இலக்கியப் பொருள் கொள்ளா விட்டால் கப்ரிலிருந்து எழும் போது எப்படி ஒரு பெண் கர்ப்பமாக இருப்பாள்?
அந்த நேரத்தில் எப்படி பாலூட்டுபவளாக அதுவும் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு இருப்பாள்? என்பன போன்ற கேள்விகள் எழும்.
இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டதை சரியாக இனம் கண்டு கொண்டால் வீண் கேள்விகள் எழுவதையும் போலி முரண்பாடுகள் உருவாகுவதையும் முற்றாகத் தவிர்த்து விடலாம்.
ஆய்வாளரின் தவறான புரிதல் - ஆறாம் காரணம்
இறுதியாக இன்னும் ஒரு காரணத்தை அலசி விடுவோம்.
இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு உருவெடுக்க சான்றுகளை மையப்படுத்திய பல காரணங்களை அடுக்கினோம். பல நேரங்களில் சான்றுகள் சரியாக இருப்பினும் ஆய்வாளரின் தவறான புரிதல் கூட முரண்பாடு தோன்றக் காரணமாக அமைந்து விடும்.
குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்யும் ஆய்வாளர், தான் ஆய்வு செய்யும் விவகாரம் தொடர்பாக எல்லா ஆதாரங்களையும் ஒருங்கே, திரட்டியிருக்க மாட்டார். சில முக்கிய தரவுகளை திரட்டத் தவறியிருப்பார்.
தான் திரட்டிய முழுமை பெறாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யும் பட்சத்தில் பிற சான்றுகளுடன் முரண்பாடான கருத்து தோன்ற அரிதான வாய்ப்புண்டு.
ஒரு சில நேரத்தில் ஆய்வாளர் அனைத்துத் தகவல்களையும் திரட்டியிருப்பார். எனினும் மனிதன் என்ற அடிப்படையில் சில சான்றுகளை தவறாகப் புரிந்து கொள்வதாலும், குர்ஆனுக்கு முரண் போன்ற தோற்றம் ஏற்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இது போன்ற தவறான புரிதலின் காரணத்தினால் குர்ஆனுக்கு முரண்பாடாக கருதிய சம்பவங்கள் உண்டு.
அப்போது நபியவர்கள் அதை குர்ஆனுக்கு முரண் அல்ல என்பதை தக்கவாறு விளக்கி இருக்கிறார்கள்.
அதற்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு:-
 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப்பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள்"அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல'' என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் அ(ந்தநரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், "பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அறிவிப்பவர் : உம்மு முபஷ்ஷிர் (ரலி), நூல் : முஸ்லிம் 4909
பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்ற நபித்தோழர்கள் இறைவன் நாடினால் நரகிற்குச் செல்ல மாட்டார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லும் போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இது குர்ஆனுக்கு முரண் எனக் குறுக்கிடுகிறார்கள்.
"உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக் காட்டி இந்த வசனத்திற்கு முரணாக தங்கள் கருத்து உள்ளது என்கிறார்கள்.
உடனே நபியவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் புரிதல் தவறானது என்பதை அதற்கு அடுத்த குர்ஆன் வசனத்தைக் கொண்டு விளக்கிவிடுகிறார்கள்.
"பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72)என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்றவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தவர்களின் பட்டியலில் இணைந்து இறைவனால் காப்பாற்றப்படலாம் எனவே நான் சொன்னது முரணான கருத்தல்ல என்பதை தெளிவாக்குகிறார்கள்.
இங்கே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் சொன்னதை குர்ஆனுக்கு முரண் என்று கருதியது அவர்களின் தவறான புரிதலின் காரணத்தினாலேயே என்பதை அறியலாம்.
இதே போன்ற நிகழ்வு ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் "எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள்.நான் "அல்லாஹ் (தன் வேதத்தில்) "வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமைப் பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 6536
மறுமையில் துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை பெறுவார் என்று நபிகளார் கூறியதும் இக்கருத்தை குர்ஆனுக்கு முரணாக அன்னை அவர்கள் கருதுகிறார்கள். காரணம் வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டவரும் விசாரிக்கப்படவே செய்வார். ஆனால் அவர் வேதனை பெறமாட்டார் என்று 84 8 வசனம் குறிப்பிடுகின்றது.
இதற்கு முரணாக நபியவர்களின் கருத்தை ஆயிஷா (ரலி) கருதுகிறார்.
உடனே நபியவர்கள் அது விசாரணை அல்ல, பதிவேடு வழங்கப்படும் நிகழ்வு தான். தாம் சொல்வது விசாரணையின் போது யார் துருவி துருவி கேட்கப்படுவானோ அவனைப் பற்றியது என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
இப்படி சில சான்றுகளைச் சரியாகக் கவனிக்காமல், அல்லது முழுமையான தகவல்களைத் திரட்டாமல் தவறாகப் புரிந்து கொள்வதும் குர்ஆனுக்கு முரணாக உள்ளது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதே நேரம் குர்ஆனுக்கு முரண் என்ற வாதத்திற்குப் பின்னால் தவறான புரிதல் மட்டும்தான் உள்ளது என்கிற வாதம் ஏற்புடையதல்ல.
ஒரு சில சான்றுகள் தெளிவாக, எந்த விளக்கமும் அளிக்க முடியாத படி குர்ஆனுக்கு முரண்படவே செய்கிறது.
அவைகளை நாம் இதுவரை குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் விரிவஞ்சி இத்தொடரில் நாம் குறிப்பிடாத இன்னும் பல வழிமுறைகளைக்கையாண்டும் எவ்வித இணக்கமான கருத்தும் காண முடிவதில்லை. அப்படியான சூழல் ஒரு ஆய்வாளருக்கு நேரும் போது குறிப்பிட்ட அந்தசெய்தியை நபிகள் நாயகம் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுப்பதே சரியான வழிமுறையாகும்.
நமக்கு முன் வாழ்ந்த ஆய்வாளர்கள், நல்லறிஞர் பெருமக்கள் இந்த வழிமுறையையே கடைப்பிடித்துள்ளார்கள்.
இது பற்றி விரிவாக அறிந்து கொள்ள பின்வரும் லிங்கில் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக